×

பஞ்சாபில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் பகவந்த் மான்

 

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

117 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்திற்கு கடந்த மாதம் 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை கடந்த 10-ம் நடைபெற்ற நிலையில், முதல் முறையாக அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்தது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் பஞ்சாபில் படுதோல்வி அடைந்தது.

 

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சி வெறும் 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங் ஆகியோர் தோல்வியை தழுவினர். இதேபோல் பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 117 சட்டமன்ற தொக்குதிகளில் ஆம் ஆத்மி 92 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. 

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான், பஞ்சாப் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். சண்டிகரில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற, பகவந்த் மான் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். பகவந்த் மான் முன்பு அறிவித்தது போலவே சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த கிராமத்தில், பதவியேற்பு விழா நடைபெறுகிறது. வருகிற 16-ம் தேதி அங்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், பகவந்த் மான் பஞ்சாப் முதலமைச்சராக பதவியேற்றுக்கொள்கிறார்.