×

ரூ.50 கோடியில் புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு அரங்கத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு

 

பெங்களூருவில் 50 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு அரங்கத்தின் சுவர் மற்றும் பார்வையாளர்கள் அரங்கம் கனமழையில் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு நகரில் எச்.எஸ்.ஆர் என்ற பகுதியில் அடல் பிகாரி வாஜ்பாய் விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் கூடைப்பந்து, வாலிபால், கபடி உள்ளிட்ட பல விளையாட்டு அரங்கம் உள்ள நிலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த விளையாட்டு மைதானம் 50 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார். 

இந்நிலையில் நேற்று இரவு பெங்களூரு நகர் முழுவதும் கனமழை பதிவானது. இந்த கனமழையில் அடல் பிகாரி வாஜ்பாய் விளையாட்டு மைதானத்தின் சுற்று சுவர் மற்றும் பார்வையாளர்கள் அரங்கம் இடிந்து விழுந்தது சேதம் அடைந்தது. பல கோடி ரூபாய் செலவில் தரமான கட்டுமான பணி நடைபெறாத காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளனர். ஒப்பந்ததாரர்களிடம் பாஜக அதிக அளவில் கமிஷன் பெற்று பணிகளை ஒதுக்கீடு செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டை இந்த விபத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த பணி ஒப்பந்தம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.