×

எமர்ஜென்சி காலகட்டத்தை மறந்துவிட்டாரோ ராகுல் காந்தி ? - ரவிசங்கர் பிரசாத் கேள்வி

 

சர்வாதிகாரத்தை பற்றி பேசும் ராகுல் காந்தி இந்திரா காந்தி காலத்தில் கொண்டு வந்த எமர்ஜென்சியை மறந்துவிட்டாரா ? என பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு,  சமையல் எரிவாயு விலை உயர்வு , வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், மற்றும்  அமலாக்க துறை மூலமாக எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கைகளை  பாஜக தலைமையிலான அரசு  மேற்கொண்டு வருவதைக் கண்டித்து,  காங்கிரஸ் சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ராகுல் காந்தி நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாத சூழல் நிலவுவதாகவும், நாட்டில் தொடர்ந்து ஜனநாயக படுகொலை நடைபெறுவதாகவும், சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருவதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.  

இந்நிலையில் ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாட்டில் பொருளாதரம் பாதிப்பு, பணவீக்கம், ஜிஎஸ்டி , வேலை வாய்ப்பு விவகாரத்தில் ராகுல் பொய் சொல்கிறார். நாட்டில் ஜனநாயகம் செத்து விட்டது என்கிறார். அவரது காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இருக்கிறதா.? அவரது குடும்ப நலனே அவருக்கு முக்கியம். குடும்பத்தினரை காப்பாற்ற ராகுல் துடிக்கிறார். ஊழலால் காங்கிரஸ் வளர்ந்துள்ளது. ராகுல் ஜாமினை நாடுவது ஏன் ? காங்கிரஸ் கூறுவதை மக்கள் ஏற்று கொள்ள மாட்டார்கள். சர்வாதிகாரம் குறித்து பேசுகிறார், இந்திரா எமர்ஜென்ஸியை அமல்படுத்தியது ஏன் ? இதனை அவர் மறந்து விட்டாரா ? நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக கூறுகிறார். அவர் தான் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வராமல் அஞ்சுகிறார். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.