×

பாஜக 40% கமிஷன் அரசு! பேரவையில் காங்கிரஸ் முழக்கம்

 

பாஜக அரசு 40 சதவீதம் கமிஷன் அரசு என சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பதாகைகளை கையில் ஏந்தி அவையில் முழக்கம் எழுப்பியதால் அமளி காரணமாக அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது. 

கர்நாடக மாநிலத்தில் கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் துவங்கியது. இன்று கூட்டத்தொடரின் இறுதி நாள் என்பதால் அவை நடவடிக்கை தொடங்கியவுடன் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு 40 சதவீத கமிஷன் அரசு விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்ராமையா அவையில் பாஜக அரசு 40 சதவீதம் கமிஷன் அரசு என்பது குறித்து விவாதிக்க தான் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீர்மானத்தையும் சபாநாயகர் நிராகரித்துள்ளார் இது குறித்து விவாதிக்க அவகாசம் தேவை என வாதம் செய்தார். இதை ஏற்கக் கூடாது என பாஜக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக 40% கமிஷன் அரசு என்று விமர்சிக்கும் பதாகைகளை கையில் ஏந்தி அவையின் மையப்பகுதியில் நின்று அரசுக்கு எதிராக கண்டனம் முழக்கங்களை எழுப்பினர் இதனால் அவையில் முழக்கங்களை எழுப்ப அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

சபாநாயகர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி பலமுறை இரு தரப்பினரையும் அமைதியாக இருக்க கோரிக்கை வைத்தும் இரு கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அவையை முற்றுகையிட்டு முழக்கமிட்டு வந்ததால் அவை நடவடிக்கையை சபாநாயகர் முழுவதுமாக ஒத்திவைத்தார்.