×

பிரதமர் மோடிக்கு வெளிநாடுகளில் பெரிய மரியாதை ஏன் கிடைக்கிறது தெரியுமா?.. ராஜஸ்தான் முதல்வர்  சொல்லும் காரணம்..

 

பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போது அவருக்கு பெரிய மரியாதை கிடைக்கும். ஏனென்றால் அவர் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றியிருக்கும் காந்தியின் தேசத்தின் பிரதமர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் தெரிவித்தார்.


ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள மான்கார் தாமில் ஆதிவாசிகள் மற்றும் பிற பழங்குடியினரின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: அசோக் (கெலாட்)  ஜி மற்றும் நானும் முதல்வர்களாக ஒன்றாக வேலை செய்தோம். எங்கள் முதல்வர்களில் அவர்தான் மூத்தவர். 

தற்போது மேடையில் அமர்ந்திருக்கும் முதல்வர்களில் கூட அசோக் ஜி இன்னும் மூத்த முதல்வர். சுதந்திரத்திற்கு பிறகு எழுதப்பட்ட வரலாற்றில் பழங்குடி சமூகத்தின் போராட்டமும் தியாகமும் அவர்களுக்கு உரிய இடத்தை பெறவில்லை. பத்தாண்டுகள்  பழமையான அந்த தவறை இன்று நாடு திருத்தி கொண்டிருக்கிறது. பழங்குடி சமூகம் இல்லாமல் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர் காலம்  முழுமையடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அந்த கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில், பிரதமர் மோடி வெளிநாடு செல்லும்போது அவருக்கு பெரிய மரியாதை கிடைக்கும். ஏனென்றால் அவர் ஜனநாயகம் ஆழமாக வேரூன்றியிருக்கும் காந்தியின் தேசத்தின் பிரதமர். இதை உலகம் உணரும்போது, அந்நாட்டின் பிரதமர் தங்கள் நாட்டுக்கு வருவதை அவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள் என தெரிவித்தார்.