×

மாமனார் தொகுதியில் களமிறங்கும் மருமகள் - மெயின்புரி தொகுதியில் டிம்பிள் யாதவ் போட்டி

 

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதியில், முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. 

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதம் கடந்த மாதம் 10ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நல குறைவால் மரணம் அடைந்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்தார். அவரது மறைவால் அந்த தொகுதி காலியானது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களில் காலியாகவுள்ள 5 எம்.எல்.ஏ. தொகுதிகளுடன் சேர்த்து முலாயம் சிங்கின் எம்.பி. தொகுதியில் டிசம்பர் 5-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மெயின்புரி மக்களவை தொகுதியிலும், 5 சட்டசபை தொகுதிகளிலும் டிசம்பர் 5-ந் தேதி நடக்கிற இடைத்தேர்தலில் பதிவாகிற வாக்குகள், டிசம்பர் 8-ந் தேதி குஜராத், இமாசலபிரதேச சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறபோது, சேர்த்து எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மெயின்புரி மக்களவை தொகுதியில், முலாயம் சிங் யாதவின் மருமகளும், அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள் யாதவ் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் இதற்கு முன்னாள் எம்.பி. பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.