×

பொழியும் குண்டு மழை.. பாயும் ஏவுகணை - உக்ரைனில் லேண்ட் ஆகமால் திரும்பிய இந்திய விமானம்!

 

போர் பதற்றம் போர் பதற்றம் என்ற தலைப்பு ஒருசில நாட்களாக ஊடங்களை ஆக்கிரமித்திருந்தது. கடைசியில் அது நடந்தேவிட்டது. இன்று காலையே ரஷ்யா உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் யார் குறுக்கே வந்தாலும் வரலாறு காணாத அழிவைப் பரிசளிப்பேன் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். இது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான மறைமுக எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அமெரிக்க அதிபர் பைடன், உயிரிழப்புகள் ஏற்பட்டால் ரஷ்யாவே பொறுப்பு என கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நேட்டோ நாடுகளுடன் ஆலோசித்து வருகிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மல்லுக்கு நின்றால் நிச்சயம் மூன்றாவது உலகப் போர் வெடிக்கும். உலகம் இதுவரை கண்டிராத பேரழிவு நிகழும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எந்தச் சூழலிலும் எங்களுக்கு ரஷ்யாவின் பாதுகாப்பே முக்கியம். அதில் சமரமே இல்லை என அழுத்தம் திருத்தமாக புடின் எச்சரித்துள்ளார். உலகம் பேரழிவைச் சந்திக்குமா தப்புமா என்பது இப்போது அமெரிக்கா கையில் தான் இருக்கிறது. ஒருவேளை உக்ரைன் தன்னிச்சையாக செயல்பட்டால் அது வேறு விதமான பாதிப்பை ஏற்படுத்தும்.

ரஷ்யாவும் சரி உக்ரைனும் சரி அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன. அவை வெளியில் எடுக்கப்பட்டால் சர்வநிச்சயமாக பேரழிவு தான். இந்தச் சமயத்தில் உக்ரைன் நாட்டிலுள்ள பிற நாட்டு மக்கள் பெரும் அச்சத்துடன் நாட்களை நகர்த்தி வருகின்றனர். இப்போது குண்டுமழை வேறு பொழிய ஆரம்பித்துள்ளதால் பீதியில் ஆழ்ந்துள்ளனர். குறிப்பாக இந்தியர்கள் பலர் அங்கே வேலை நிமித்தமாகவும் படிப்பிற்காகவும் வசித்து வருகின்றனர். அவர்களை மீட்க வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு இருக்கிறது. போர் ஆரம்பமாகும் முன்பாகவே இந்தியா சார்பில் ஏர் இந்தியா விமானம் அங்கு சென்றது.

அந்த விமானம் உக்ரைன் செல்லும்போது போர் தொடங்கிவிட்டதால் வேறு வழியில்லாமல் தரையிறங்காமலேயே அப்படியே இந்தியாவிற்கு திரும்பியது. அந்த விமானம் இந்தியர்களை அழைத்து வர சென்றது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் வான் பகுதியில் ரஷ்யாவின் ராணுவ விமானங்கள் பறந்துகொண்டே இருப்பதாலும், எப்போது குண்டு தாக்கும் என சொல்ல முடியாது என்பதாலும் விமானம் திரும்பிச் சென்றுள்ளது. உக்ரைனும் தன்னுடைய வான் எல்லையை மூடியுள்ளதும் ஒரு காரணம். இது அந்நாட்டிலுள்ள இந்தியர்களை மேலும் மேலும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. 

2014ஆம் ஆண்டு உக்ரைன் அரசுக்கும் அந்நாட்டின் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் வெடித்தது. 2014 ஜூலையில் அங்கு சென்ற மலேசியா ஏர்லைன் விமானத்தை ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகள் தவறுதலாக ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தினர். அந்த விமானத்தில் பயணித்த கேப்டன்கள் உள்ளிட்ட  298 பயணிகளும் உயிரிழந்தனர். இதுதொடர்பான விசாரணை இப்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிழக்கு உக்ரைனிலிருந்து ஏவப்பட்ட ரஷ்ய தயாரிப்பு ஏவுகணையால் தான் இந்த தாக்குதல் தொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையும் கருத்தில்கொண்டே ஏர் இந்தியா திரும்பி வந்துள்ளது.