×

மனைவி கோபமாக இருக்கா லீவு தாங்க... உத்தர பிரதேச காவலர்  உயர் அதிகாரிக்கு எழுதிய விடுமுறை விண்ணப்பம்
 

 

உத்தர பிரதேசத்தில் காவலர் ஒருவர், தான் வீட்டுக்கு செல்லாததால் மனைவி கோபமாக இருப்பதை காரணம் காட்டி விடுமுறை கேட்டு உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதம் வைரலாகி உள்ளது.


உத்தர பிரதேசம் காவல் துறையில் காவலராக இருப்பவர் மௌ மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த மாதம் திருமணம் ஆனது. அதன் பின்னர் அவர் உத்தர பிரதேசத்தின் மஹராஜ்கஞ்ச் மாவட்டத்தில் நௌதன்வா காவல் நிலையத்தில் பணியில் இருந்து வருகிறார். இந்தோ-நேபாள எல்லையின் பி.ஆர்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

விடுமுறை கிடைக்காத காரணமாக காவலர் ரமேஷால் வீட்டுக்கு செல்ல முடியவில்லை. இதனால் அவரது மனைவி மிகவும் கோபமடைந்துள்ளார். இதனையடுத்து, எனது மனைவி கோபமாக இருக்கிறாள் எனவே  விடுமுறை தரும்படி காவல்துறை உயர் அதிகாரிக்கு காவலர் ரமேஷ் எழுதிய கடிதம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காவலர் ரமேஷ் எழுதிய விடுமுறை விண்ணப்பத்தில், எனக்கு விடுமுறை கிடைக்காதால் கோபமான என் மனைவி என்னுடன் போனில் பேசுவதில்லை. நான் பலமுறை போனில் அவளை அழைத்தேன் ஆனால் அவர் தனது தாயிடம் போனை குடுத்து விடுகிறார்.

எனது மருமகனின் பிறந்தநாளுக்கு வீட்டிற்கு வருவேன் என்று எனது மனைவிக்கு உறுதியளித்துள்ளேன். ஆனால் விடுமுறை இல்லாமல் என்னால் வீட்டுக்கு செல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார். விண்ணப்பத்தை படித்த உதவி கண்காணிப்பாளர்,  காவலர் ரமேஷ்க்கு ஜனவரி 10 முதல் ஐந்து நாள் சாதாரண விடுப்புக்கு ஒப்புதல் அளித்தார். மேலும், கடைமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு அவர்களின் தேவைக்கேற்ப விடுமுறை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விடுப்பு காரணமாக எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் விஷேச கவனம் செலுத்தப்படுகிறது என தெரிவித்தார்.