×

"இந்தியாவின் கொரோனா சான்றிதழுக்கு 96 நாடுகள் அனுமதி" - மத்திய அமைச்சர் தகவல்!

 

இந்தியாவில் செலுத்தப்படும் கோவாக்சின் போட்டுக்கொண்டவர்கள் வேறு எந்த நாட்டுக்கும் செல்ல முடியாது. அந்தத் தடுப்பூசிக்கு இன்னமும் உலக சுகாதார அமைப்பிடம் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்தாண்டு இறுதிக்குள் கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சூழலில் மற்றொரு தடுப்பூசியான கோவிஷீல்டுக்கும் சிக்கல் எழுந்திருக்கிறது. கோவிஷீல்டையும் கோவாக்சினையும் அங்கீகரிக்க முடியாது என பல்வேறு நாடுகள் அறிவித்திருக்கின்றன.

தடுப்பூசியில் பிரச்சினையில்லை; இந்தியாவில் வழங்கப்படும் தடுப்பூசி சான்றிதழில் தான் பிரச்சினை என அந்நாடுகள் தெரிவிக்கின்றன. யார் வேண்டுமானாலும் போலியாக சான்றிதழை தயாரிக்க முடிவதால் தங்கள் நாட்டில் இந்தியர்களை அனுமதிக்க முடியாது என்கின்றன. இதனால் இந்தியாலிருந்து வருபவர்களுக்கு 15 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் உள்ளிட்ட கெடுபிடிகள் விதிக்கப்படுகின்றன. இதையடுத்து இந்தியாவின் கடும் அழுத்தத்திற்குப் பின்னர் பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்தியர்களின் தடுப்பூசி சான்றிதழை அங்கீகரித்தன.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவின் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சர்வதேச அளவில் 96 நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதன் காரணமாக இந்தியாவிலிருந்து அந்த நாடுகளுக்குச் செல்லும் பொதுமக்கள் தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கெடுபிடிகள் இருக்காது. வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் இந்தச் சான்றிதழை கோவின் இணையதளத்தில் பதவிறக்கி கொள்ளலாம். கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் இதில் அடங்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.