×

டெல்லியை ஆட்டிப்படைக்கும் கொரோனா... பாஜக தலைமை அலுவலகத்தில் 50 பேருக்கு தொற்று!

 

கொரோனா முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலை தான் இந்தியாவை சின்னாபின்னமாக்கியது. குறிப்பாக தலைநகர் டெல்லி படாத பாடுபட்டது. டெல்லியின் நிலையைக் கண்டு வருத்தப்படுவதா தங்கள் மாநிலத்தில் நடப்பதைக் கண்டு வருத்தப்படுவதா என தெரியாமல் பெரும்பாலான மாநில அரசுகள் புலம்பின. அந்தளவிற்கு டெல்லியை உலுக்கி எடுத்தது டெல்டா கொரோனா. தற்போது வந்திருப்பதோ ஒமைக்ரான். இந்த கொரோனா டெல்டாவை விட அதிவேகமாகப் பரவக்கூடியது.நினைத்ததை விட வேகமாகப் பரவி மூன்றாம் அலையையும் உருவாக்கிவிட்டது. 

வழக்கம் போல தலைநகர் டெல்லியை தான் வச்சி செய்கிறது. பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளின் கட்சி தலைமை அலுவலகங்கள், முக்கிய அமைச்சர்களின் இல்லம், பிரதமர் இல்லம், நாடாளுமன்றம், குடியரசு தலைவர் மாளிகை என அனைத்து முக்கிய இடங்களும் டெல்லியில் தான் உள்ளன. இதனால் அங்கிருக்கும் முக்கியப் புள்ளிகளுக்கும் எளிதில் கொரோனா பரவ வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.   

இச்சூழலில் டெல்லியிலுள்ள பாஜக தலைமையகத்தில் பணிபுரியும் 50 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றக் கூடிய தூய்மைப் பணியாளர்கள், சேவை பணியாளர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், ஊடக இணை தலைவர் சஞ்சய் மயூக் உள்ளிட்ட 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டு, கட்டுப்பாடுகள் அதிகம் விதிக்கப்பட்டுள்ளன. முக்கியஸ்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.