×

கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்ய சென்ற 5 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பலி.. 

 

மகாராஷ்டிராவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.  

மகாராஷ்டிரா  மாநிலம் பர்பானி மாவட்டத்தில்  உள்ள ஒரு பண்ணையில் அமைந்துள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக 6 தொழிலாளர்கள் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர்.  சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவர்களுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.  திடீரென அவர்கள் மயங்கி விழுந்துள்ளனர்.  இதனையடுத்து அவர்கள் அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்,  5 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், ஒரு தொழிலாளி கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  

சோன்பெத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பௌச்சா தாண்டா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.  இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக  சோன்பெத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வியாழக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.