×

மக்களே கவனம்... இந்த 43 மருந்துகள் தரமற்றவை; வாங்கி சாப்பிட்டுராதீங்க! 

 

இந்திய மக்களுக்கு கடவுள் பக்தி அதிகம் இருந்தாலும் காய்ச்சல் அடித்தால் தேடுவது மருந்தகங்களைத் தான். முதற்கட்டமாக மருந்து, மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். அதில் சரியாகவில்லையெனில் மருத்துவரை நாடுகிறார்கள். ஆனால் நேரடியாக மருத்துவரைப் பார்க்காமல் மெடிக்கல்களுக்கு செல்வது தான் வினை. ஒருசில மெடிக்கல்கள் மருத்துவரின் குறிப்பில்லாமல் மாத்திரைகளைக் கொடுப்பதில்லை. இருப்பினும் இன்னும் சில மெடிக்கல்கள் மக்கள் மருந்து கேட்டால் கொடுத்துவிடுகிறார்கள். அது போலியானதா, தரமற்றதா என எதுவுமே தெரியாமல் மக்களும் உட்கொள்கிறார்கள்.

ஆகவே இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வுசெய்து வருகின்றன. இந்த ஆய்வில் தரமற்ற, போலியான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஆயிரத்து 227 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் ஆயிரத்து 184 மருந்துகள் தரமானவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேசமயம் காய்ச்சல், தொண்டை அலர்ஜி, அஜீரண கோளாறுகளுக்கான 43 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. இந்த மருந்துகள் இமாச்சலப் பிரதேசம், குஜராத், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த தரமற்ற மருந்துகள் பற்றிய விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் https://cdsco.gov.in வெளியிட்டுள்ளது.