×

அதிர்ச்சி... நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா - பதற்றத்தில் டெல்லி!

 

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. முதல் இரண்டு அலைகளைக் காட்டிலும் மூன்றாம் அலையில் அதிவேகமாக கொரோனா தாக்குகிறது. அந்த அலைகளை விட மூன்றாம் அலையில் தினசரி கொரோனா பாதிப்புகள் 23 சதவீதத்திற்கும் அதிகமாகப் பதிவாகின்றன. தினசரி கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தொட முதல் இரண்டு அலைகளுக்கு ஒரு மாதமோ, இரண்டு மாதமோ தேவைப்பட்டது. ஆனால் தற்போது ஒரே வாரத்தில் 100லிருந்து 10 ஆயிரத்திற்கு ஜம்ப் ஆகியிருக்கிறது கொரோனா பரவல். 

நல்ல வேலையாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் தொற்று எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. இல்லையெனில் இதை விட அபரிமிதமாக தொற்று எண்ணிக்கை உயர்ந்திருக்க கூடும். கொரோனா பரவலையொட்டி பல்வேறு மாநிலங்களில் சட்டப்பேரவைகள் கூட்டப்படவில்லை. தமிழ்நாட்டில் கூட்டத்தொடர் தொடங்கினாலும் மூன்றே நாட்களில் முடிவடைந்தது. இச்சூழலில் நாடாளுமன்றத்தில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. பிப்ரவரியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனையொட்டி நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஜனவரி 4ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை 1,409 ஊழியர்களுக்கு கொரொனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் இதுவரை 402 ஊழியர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு ஒமைக்ரானா என கண்டறிய மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மக்களவை ஊழியர்கள் 200 பேர், ராஜ்யசபா ஊழியர்கள் 69 பேர், இரு அவைகளுக்கு பொதுவான ஊழியர்கள் 133 பேர் 402 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.