×

"திருப்பதி தேவஸ்தானத்திற்கு 4 கோடி ரூபாய் இழப்பு" : காரணம் இதுதானாம்!!

 

கனமழை காரணமாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில்  கடந்த வாரம் கன மழை கொட்டி தீர்த்தது.  குறிப்பாக 17, 18, 19 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால்  இதுவரை 30 ஆண்டுகளில் இல்லாதது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் திருப்பதி மலைப் பாதைகள் கடுமையான சேதம்  அடைந்தன. அத்துடன் திருப்பதி மலைக்கு நடந்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் வழித்தடங்களும் பாதிக்கப்பட்டன.  திருமலை பகுதியில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்ததுடன்,  மலை அடிவாரத்திலிருக்கும் கபிலேஸ்வரர் சுவாமி கோவில் முக மண்டபமும் இடிந்து விழுந்தது.

இதையெல்லாம் சரி செய்ய சுமார் 70 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என தேவஸ்தான பொறியியல் துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். மேலும் தேவஸ்தான ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள குடியிருப்புகளும் கடுமையாக சேதமடைந்ததால்  இதுவரையில் திருமலை திருப்பதியில் சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏழுமலையானை வழிபடுவதற்காக ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் கனமழை காரணமாக திருப்பதிக்கு வர முடியாமல் போனது. மழை பாதிப்பு குறைந்த உடன் ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டை வைத்தே ஏழுமலையானை வழிபடலாம் என தேவஸ்தனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.