×

ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல் - 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்

 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராஜௌரி மாவட்டத்தில் இந்திய ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராஜௌரி மாவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்நிலையில் எல்லையில் ஊடுருவி ராணுவ முகாமிற்குள் திடீரென புகுந்த பயங்கரவாதிகள் முகாமில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரமான தாக்குதலில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதேபோல் தற்கொலைப் படை தாக்குதல் நடத்திய இரண்டு பயங்கரவாதிகளும் குண்டுவெடிப்பில் உயிரிழந்தனர். இந்த தற்கொலைப் படை தாக்குதலில் மேலும் சில ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு ராணுவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

தற்கொலைப் படை தாக்குதல் நடைபெற்ற முகாம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பயங்கரவாதிகள் வேறு யாராவது பதுங்கி உள்ளனரா என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இன்னும் உரிமை கொள்ளாத நிலையில், தாக்குதல் சம்பவத்திற்கு தலைவர்கள் பலரும் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட நாடு தயாராகி வரும் நிலையில், ராணுவ முகாமிற்குள் புகுந்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.