தாய், தந்தைக்கு நடுவில் படுத்திருந்ததால் விபரீதம்- 23 நாட்களே ஆன குழந்தை மூச்சுத்திணறி பலி
உத்தரப்பிரதேசத்தில் தாய்-தந்தைக்கு நடுவில் 23 நாளுக்கு முன் பிறந்த குழந்தையை படுக்க வைத்ததால் மூச்சு திணறி உடல் நசுங்கி குழந்தை தாய்-தந்தை நடுவிலேயே உயிரிழந்தது.
உத்தரப்பிரேத மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் பெற்றோருக்கு அருகில் தூங்கிக் கொண்டிருந்த 23 நாள் குழந்தை ஒன்று தற்செயலாக மூச்சுத் திணறலால் உயிரிழந்ததாக காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சியில் இருந்த குடும்பம், தற்போது குழந்தை பறிபோனதால் துயரத்தில் ஆழ்ந்தது. குழந்தையின் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை இரவு குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தனர், திடீரென நடுவில் கண் விழித்துப் பார்த்தபோது, குழந்தை எவ்வித அசைவும் இல்லாமல் இருப்பதைக் கண்டனர். உடனே பெற்றோர் குழந்தையை கஜ்ரௌலாவில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் யோகேந்திர சிங், குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்தார்.
குழந்தை தற்செயலாக நசுக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததாகத் தெரிகிறது என்று மருத்துவர் கூறினார். குளிர்காலத்தில் குடும்பங்கள் அரவணைப்புக்காக ஒன்று கூடும்போது இதுபோன்ற அபாயங்கள் அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.