×

மகளிருக்கு 2 மணி நேரம் வேலை தளர்வு - இன்று முதல் அமல்

 

புதுச்சேரி அரசு அலுவலகங்களில் மகளிருக்கு 2 மணி நேர வேலை தளர்வு இன்று முதல் அமலாகிறது.

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.  இந்த சட்ட மசோதா நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் கடந்த ஒன்றாம் தேதி 12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ் பெறப்பட்டது. 

இதனிடையே அரசு பெண் ஊழியர்களுக்கு சலுகையை அறிவித்த புதுச்சேரி அரசு,  அரசு துறையில் பணிபுரியும் மகளிருக்கு வாரத்தில் வெள்ளிக்கிழமை மட்டும் இரண்டு மணி நேரம் வேலை குறைக்கப்பட்டு சலுகை வழங்கப்படும் என்று தெரிவித்தது. அதாவது எட்டு மணி நேரத்திற்கு பதிலாக ஆறு மணி நேரம் வேலை பார்த்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டது.  இந்த சலுகை  மருத்துவமனை,  காவல் நிலையம் போன்ற அத்தியாவசிய சேவை பணியில் உள்ளோருக்கு சிறப்பு அனுமதி பொருந்தாது என்றும்  கூறப்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரி அரசு அலுவலகங்களில் மகளிருக்கு இரண்டு மணி நேர வேலை தளர்வு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.  ஒரு மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகள் மட்டும் காலை 8:45 மணி  முதல் 10:45 மணி வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.