×

1.5 லட்சத்தை தாண்டியது கொரோனா... அடுத்து 2 லட்சம் தான் டார்கெட்டாம் - மக்களே ஜாக்கிரதை!

 

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. முதல் இரண்டு அலைகளை விட மூன்றாம் அலையில் தான் கொரோனா அபரிமிதமாகப் பரவுகிறது. முதல் அலையில் தினசரி பாதிப்பான 7 ஆயிரத்தை தொட 58 நாட்கள் ஆனது. இரண்டாம் அலையில் இதே எண்ணிக்கையை தொட 1 மாதமானாது. ஆனால் மூன்றாம் அலைக்கு ஒரே வாரம் தான் தேவைப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு முன்பு 1000 என இருந்த தினசரி பாதிப்பு நேற்றோ 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழ்நாட்டை விட டெல்லி, மகாராஷ்டிராவில் ஒரு வாரத்திற்குள்ளாகவே இந்த எண்ணிக்கையை தொட்டு, அதையும் தாண்டி பதிவாகி வருகிறது. இச்சூழலில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 632 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 623. இதுவரை ஒமைக்ரான் 27 மாநிலங்கள் மற்றும் யுனியன் பிரதேசங்களில் பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 55 லட்சத்து 28 ஆயிரத்து 4ஆக உயர்ந்துள்ளது. 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் புதிதாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், குணமடைவோரின் விகிதம் 96.98 சதவீதமாக குறைந்துள்ளது. தினசரி பாசிட்டிவிட்டி விகிதம் 10.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது 100 பேருக்கு பரிசோதனை செய்தால் குறைந்தது 10 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் 41 ஆயிரத்து 434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 327 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.