×

தகனம் செய்யப்பட்ட மகன் 15 நாட்களுக்கு பின் உயிருடன் வந்ததால் பெற்றோர் அதிர்ச்சி

 

பஞ்சாபின் கபூர்தலாவில் இறந்ததாக அறிவிக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்ட நபர், 15 நாட்களுக்குப் பிறகு பஞ்சாப் சிறையில் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபின் கபூர்தலாவை சேர்ந்த ரவிக்குமார், ஆகஸ்ட் 5 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் திரும்பவில்லை. அவரது தந்தையும் சகோதரரும் பல இடங்களில் அவரைத் தேடியுள்ளனர். ஆனால் அவரைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அவர்களின் முயற்சிகள் பலனளிக்காததால், ரவிக்குமார் குடும்பத்தினர் ஆகஸ்ட் 11 அன்று கபூர்தலா நகர காவல் நிலையத்தை அணுகி, காணவில்லை எனப் புகார் அளித்தனர். இதற்கிடையில், ஒரு இளைஞரின் எரிந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்தது. அந்த இளைஞரின் புகைப்படங்கள் குடும்பத்தினருக்குக் காட்டப்பட்டன. சில நாட்களுக்குப் பிறகு, குடும்ப உறுப்பினர்களும் மற்றவர்களும் அந்தச் சடலம் ரவி குமாருடையது என நம்பி, ஆகஸ்ட் 13 அன்று அவரது உடலைத் தகனம் செய்தனர். 

தங்கள் மகன் இறந்துவிட்டதாக சோகத்தில் மூழ்கி கிடந்த ரவிக்குமாரின் பெற்றோருக்கு செப்டம்பர் 2 ஆம் தேதி, கபூர்தலாவில் உள்ள மத்திய சிறைச்சாலையின் ஊழியர் ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அவர், ரவி குமார் என்ற நபர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். ரவிகுமார் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் ஜலந்தர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், மறுநாள் சிறைக்குச் சென்றபோது ரவி குமார் உயிருடன் இருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தனர்.