உறவினர்களை வழியனுப்பப் போய் வந்தே பாரத் ரயிலில் சிக்கிய 12 பேர்! 150 கி.மீ இலவசப் பயணம்
ஊருக்குச் செல்லும் உறவினர்களை வழியனுப்பச் செல்பவர்கள், ரயில் பெட்டிக்குள் ஏறி லக்கேஜ்களை வைத்துவிட்டு, ரயில் புறப்படும் அந்தச் கடைசி நொடியில் அவசரமாகக் கீழே இறங்குவது நம் ஊர்களில் வழக்கமான ஒன்றுதான். ஆனால், அதிநவீன 'வந்தே பாரத்' (Vande Bharat) ரயிலில் இப்படிச் செய்யப்போய் 12 பேர் ஒன்றாகச் சிக்கிக் கொண்ட சுவாரஸ்யமான அதிர்ச்சிச் சம்பவம் உத்திரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
வாரணாசி - டெல்லி (Varanasi-Delhi) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கான்பூர் (Kanpur) ரயில் நிலையத்தில் நின்றபோது, பெட்டிக்குள் இருந்த தங்கள் உறவினர்களை வழியனுப்ப 12 பேர் ரயிலுக்குள் ஏறியுள்ளனர். அவர்கள் உள்ளே இருக்கும்போதே, ரயிலின் 'ஆட்டோமேட்டிக்' (Automatic) கதவுகள் திடீரென மூடப்பட, எவராலும் வெளியே வரமுடியாமல் அந்த 12 பேரும் பெட்டிக்குள் சிக்கிக்கொண்டனர். வேறு வழியின்றி அந்த ரயிலிலேயே பயணித்த அவர்கள், சுமார் 150 கிலோமீட்டர் தூரம் கடந்து எட்டாவா (Etawah) ரயில் நிலையத்தை அடைந்த பிறகே, அந்த ரயில் நிறுத்தப்பட்டது. அங்கு ரயில்வே அதிகாரிகளும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் (RPF) கதவுகளைத் திறந்து அவர்களைப் பத்திரமாகக் கீழே இறக்கினர்.
உறவினர்களை வழியனுப்பச் சென்றதற்காக இவ்வளவு தூரம் இலவசமாகப் பயணம் செய்த அந்த 12 பேருக்கும் காத்திருந்தது ஒரு மாபெரும் அதிர்ச்சி! முறையான பயண டிக்கெட் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட் (Platform ticket) கூட இல்லாமல் ரயிலில் பயணித்ததற்காக, அவர்களுக்குத் தலா ரூ. 3,000 வீதம் மொத்தம் ரூ. 36,000 அபராதம் (Fine) விதிக்கப்பட்டது. வந்தே பாரத், நமோ பாரத் மற்றும் மெட்ரோ போன்ற ஆட்டோமேட்டிக் கதவுகள் உள்ள அதிநவீன ரயில்களில், வழியனுப்பப் பெட்டிக்குள் ஏறுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவமே ஒரு பெரிய உதாரணம்!