×

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 103 பேர் பலி.. ரயில் விபத்து குறித்த உண்மை வெளிவரனும்  - மம்தா..

 

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 103 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது, எனவே இந்த விபத்து தொடர்பாக உண்மை வெளி வர வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.   

கடந்த 2ம் தேதி  ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே  கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில்  மற்றும் ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின.  அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில், 275 பேர் உயிரிழந்துள்ளனர். 1,200 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரும் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரித்தது.

இதுவரை 170 பேரின் சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளது. பலரது உடல்கள் ரயில் பெட்டிகளுக்கு அடியில் சிக்கி சிதைந்து போயுள்ளதால் அடையாளம் காணமுடியவில்லை. அத்துடன் விபத்து நடந்து  4 நாட்கள் கடந்துவிட்டதாலும் உடல்களை அடையாளம் காண்பதில் கடும் சவால் ஏற்பட்டுள்ளது.  இருப்பினும்  மீதமுள்ளவர்களின் சடலங்கள் ஓரிரு நாட்களில்  அடையாளம் காணப்படும் என்று கூறப்படுகிறது.

ஒடிசா ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ள நிலையில், விபத்துக்கான உண்மையான காரணம் வெளிவந்தாக வேண்டும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.  ஒடிசா ரெயில் விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறிய  மம்தா பானர்ஜி, பின்னர் செய்தியாளர்ளை சந்தித்தார். அப்போது அவர், “உயிரிழந்தவர்களில் 103 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 97 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 பேர் குறித்த தகவல் இல்லை. இந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, விபத்துக்கான உண்மைக் காரணம் வெளிவந்தாக வேண்டும்”என்றார்.