×

திடீரென 100 மாணவர்களுக்கு கொரோனா... 1 மாதத்தில் 300% பாதிப்பு உயர்வு - வாட்டும் 3ஆம் அலை!

 

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரே வாரத்தில் மும்மடங்காக உயர்ந்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா, பீகார், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பரவல் வேகம் நினைத்துப் பார்க்க முடியாத வண்ணம் அதிகரித்துள்ளது. மூன்றாம் அலையும் தொடங்கிவிட்டதாக சுகாதார துறையினர் அறிவித்துவிட்டனர். குறிப்பாக அபாயகரமான டெல்டாவும் அதை விட உக்கிரமாகப் பரவக்கூடிய ஒமைக்ரானும் ஒருசேர இணைந்து பரவி வருவதே இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. 

கொரோனா பரவல் சட்டென்று உயர்ந்துள்ளதால் பெரும்பாலான மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு, மினி ஊரடங்கு போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணியையும் துரிதப்படுத்தியுள்ளன. பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஒருசில மாநிலங்களில் நேரடி வகுப்புகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் பீகார், பஞ்சாப்பில் வழக்கம்போல் அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்படுகின்றன.

இச்சூழலில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 மருத்துவ மாணவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பின் முன்னெச்சரிக்கையாக விடுதியில் தங்கியிருந்து படித்துவரும் மாணவர்கள் உடனடியாக தங்களின் அறைகளை விட்டு காலி செய்யுமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பஞ்சாப்பில் கடந்த 4 வாரங்களில் 300 சதவீதம் கொரோனா பாதிப்புகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல பீகார் மாநிலம் பாட்னாவிலுள்ள நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சில மருத்துவர்களுக்கு அறிகுறி தென்பட்டிருக்கிறது. இதையடுத்து 194 மருத்துவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 156 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக முடிவு வந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,892 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.