×

10 நீதிபதிகள், 400க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பாசிட்டிவ் - கதிகலங்கும் உச்ச நீதிமன்றம்!
 

 

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த ஒமைக்ரான் பாதிப்போ 9 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுகள் அரசு அலுவலகங்களில் பணிபுரிவோரின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைத்துவிட்டன. இருப்பினும் அத்தியாவசிய பணிகளுக்கான அலுவலகங்கள் மட்டும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி 100% அலுவலர்களுடன் செயல்படுகின்றன.

அதேபோல நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன. இரண்டாம் அலை முடிவடைந்த பின் நீதிமன்றங்களில் நேரடி விசாரணையே நடைபெற்று வருகின்றன. முன்னதாக ஆன்லைன் மூலமே வழக்குகள் விசாரிக்கப்பட்டன. முக்கியமான அவசரமான வழக்குகள் மட்டுமே குறிப்பிட்ட நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டன. அந்த வகையில் தற்போது மூன்றாம் அலை தொடங்கியபோதிலும் நீதிமன்றங்களில் நேரடியாகவே விசாரணைகள் நடைபெற்று வந்தன. இச்சூழலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்களுக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

பரிசோதனை செய்ததில் 10 நீதிபதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் இரண்டு பேர் குணமடைந்து விட்டனர். எனினும் மீதமுள்ள 8 பேர்  தங்களது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தின் ஊழியர்கள் 1,500 பேரில் 400க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. வழக்கறிஞர்கள் அவர்களுடைய உதவியாளர்கள் உள்ளிட்டோரும் பாதிக்கப்படுவதால் நீதிமன்ற நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் இருந்து எடுக்கப்படும் கொரோனா பரிசோதனைகளில் 30% பாசிட்டிவ் என்றே வருகிறதாம்.