×

தோல்வி பயத்தால் வந்த பிபி, சுகர்… காலை சுற்றும் ஐடி ரெய்டு – விஜயபாஸ்கரை மிரட்டும் உள்ளடி அரசியல்!

அதிமுக ஜெயிக்கிறதோ, தோற்கிறதோ அதைப் பற்றியெல்லாம் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கவலையே இல்லை. அவர் விராலிமலையிலேயே முடங்கி கிடப்பதே அதற்கு அத்தாட்சி. எங்க அண்ணன் படுத்துக்கொண்டே ஜெயிப்பார் என அவரது ஆதரவாளர்கள் சூளுரைக்க என் கஷ்டம் என்னோட என்பது போல் உறங்க கூட நேரமில்லாமல் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்துவருகிறார். பல முனையிலிருந்து எதிர்ப்புகள் பெருகிக் கொண்டே போவது அதற்குக் காரணம். 2016 தேர்தலில் குடைச்சல் கொடுத்த தென்னலூர் பழனியப்பன் கடந்த இரு தேர்தல்களில் விராலிமலையில்
 

அதிமுக ஜெயிக்கிறதோ, தோற்கிறதோ அதைப் பற்றியெல்லாம் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கவலையே இல்லை. அவர் விராலிமலையிலேயே முடங்கி கிடப்பதே அதற்கு அத்தாட்சி. எங்க அண்ணன் படுத்துக்கொண்டே ஜெயிப்பார் என அவரது ஆதரவாளர்கள் சூளுரைக்க என் கஷ்டம் என்னோட என்பது போல் உறங்க கூட நேரமில்லாமல் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்துவருகிறார். பல முனையிலிருந்து எதிர்ப்புகள் பெருகிக் கொண்டே போவது அதற்குக் காரணம்.

2016 தேர்தலில் குடைச்சல் கொடுத்த தென்னலூர் பழனியப்பன்

கடந்த இரு தேர்தல்களில் விராலிமலையில் வெற்றிபெற்றார். 2011இல் அமோக வெற்றியென்றாலும் 2016இல் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியாக விஜயபாஸ்கருக்கு அமையவில்லை. 8 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தான் திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பனை தோற்கடித்திருந்தார். விராலிமலையில் விஜயபாஸ்கருக்கு எந்தளவு செல்வாக்கு இருக்கிறதோ அதற்குச் சமமான செல்வாக்கு பழனியப்பனுக்கும் இருப்பது அவரின் அடிவயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் களம் இப்போது அனல் பறந்தாலும் விராலிமலையில் எப்போதோ அனல் பறந்துவிட்டது.

விஜயபாஸ்கர் பொங்கல் சீர்வரிசை

இம்முறை ஹாட்ரிக் அடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பொங்கல் சீர் வரிசை தொகுதி மக்களுக்குக் கொடுத்தார். அரசு தனியே கொடுத்தாலும் இவர் பிரத்யேகமாக விராலிமலையில் ஸ்கோர் செய்தார். அதேபோல வீடு வீடாகச் சென்று முதியவர்களுக்கு இலவச கண் கண்ணாடி, மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் என ஒரு அமைச்சராக கொண்டுவர வேண்டிய திட்டங்கள் அனைத்தையும் அவசர அவசரமாக கடந்த ஓர் ஆண்டில் கொண்டுவந்திருக்கிறார். தொகுதிகளில் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்திருக்கிறாரே அப்புறம் ஏன் விஜயபாஸ்கருக்கு பயம் வருகிறது.

பழனியப்பனின் மக்கள் செல்வாக்கும் காலை சுற்றும் ஐடி ரெய்டும்

விஜயபாஸ்கரை விட தொகுதி மக்களுடன் மக்களாக கலந்திருப்பவர் பழனியப்பன். மக்கள் சொல் தட்டாமல் அவர்களின் குடும்ப நிகழ்வில் தவறாமல் ஆஜராவார். சுப நிகழ்வுகள் மட்டுமல்லாமல் துக்க நிகழ்வுகளையும் கலந்துகொள்வார். பெரிய வசதிகள் இல்லாவிட்டாலும் கொரோனா காலத்திலும் தனது கை காசை போட்டு நலத்திட்ட உதவிகளைச் செய்திருக்கிறார். இப்படி பல நல்ல இமேஜ்கள் பழனியப்பனிடம் இருக்கின்றன. குறிப்பாக, கடந்த முறை ஜெயிக்கவைக்க முடியவில்லையே என்ற ஒரு பரிதாப மனநிலையும் மக்களிடம் உள்ளது.

இதனுடன் அதிமுக+பாஜக எதிர்ப்பு மனநிலை ஒன்றிப் போவதால் விஜயபாஸ்கரின் வெற்றிக்குப் பாதகம் விளைவிக்கிறது. கள நிலவரத்தின்படி நிச்சயமாக விஜயபாஸ்கர் மீது தொகுதி மக்களுக்கு எந்த அதிருப்தியும் இருப்பதாகத் தெரியவில்ல. எளிமை பழனியப்பனின் பிளஸாக இருக்க, ஐடி ரெய்டுகள் விஜயபாஸ்கரின் மைனஸாக இருக்கிறது. இரு நாட்களுக்கு முன்பு கூட அமைச்சர் சகோதரர் உதவியாளர், ஊழியர் ஆகியோரது வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பூதாகரமான உட்கட்சி அரசியல்

இதெல்லாம் ஒருபுறம் இருந்தால் புது தலைவலியாக முத்தரையர் சமுதாய வாக்குகள். விராலிமலையின் X-factor ஆக வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக இருக்கிறது. தென்னலூர் பழனியப்பனும் விஜயபாஸ்கரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சரிசமமாக சமுதாய வாக்குகளைப் பிரிப்பார்கள். வெற்றிபெற இருவருக்குமே முத்தரையர் வாக்குகள் மிக மிக அவசியம். அதற்கும் உலை வைத்திருக்கிறார்கள். உட்கட்சிக்குள்ளேயே வினை இருக்கிறது.

சீட் கொடுக்காத அதிருப்தியில் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் மகள் தனலட்சுமி சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார். அமைச்சரைத் தோற்கடித்தே தீருவேன் என போர்க்கொடி உயர்த்தியுள்ளார். திமுக பழனியப்பனுக்காவது ஒரு பக்கம் தான் இடி. விஜயபாஸ்கருக்கு இரு பக்கமும் இடி என்பது போல் அதிமுக ஓட்டை பிரிக்க அமமுக சார்பில் கார்த்திக் பிரபாகரன் களமிறக்கப்பட்டுள்ளார். ஆகவே அதிமுக வாக்கு வங்கியிலும் பெரிய ஓட்டை விழுந்திருக்கிறது.

இயேசுவான விஜயபாஸ்கர்
ஐடி ரெய்டு, பழனியப்பனுக்கான செல்வாக்கு மற்றும் அவர் மீதான அனுதாபம், முத்தரையர் வாக்குகள் சிதறடிப்பு, ஒரு பக்கம் அமமுக என பலமுனை தாக்குதல்களுக்கு ஆகியிருக்கிறார் ஹெல்த் மினிஸ்டர். பின்ன பயம் வராதா? அந்தப் பயத்தில் தான், எனக்கு பிபி, சுகர் இருக்கிறது… இருந்தாலும் இயேசு சிலுவையைச் சுமப்பது போல் விராலிமலையைத் தூக்கி சுமக்கிறேன் என்று கூறி கண்ணீர் விட்டார். கடந்த தேர்தலில் பெரிய மகளைப் பிரச்சாரத்துக்கு இறக்குவிட்டவர், இம்முறை சின்ன மகளை இறக்கிவிட்டிருக்கிறார். தாய்மார்களின் வாக்குகளைக் குறிவைக்கிறராம்.

ரகசியம் மக்கள் விரல்களில்!

இந்தத் தாக்குதல்களையும் சவால்களையும் எதிர்கொண்டு மீண்டும் எம்எல்ஏ ஆவரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நெருப்பாற்றை நீந்தி கடந்து கரை சேர்வாரா அல்லது மூழ்கி விடுவாரா என்பது மே 2ஆம் தேதி தெரியும். வந்துகொண்டிருக்கும் கருத்துக்கணிப்புகள் அமைச்சருக்கு எதிராகவே இருக்கின்றன. நாட்கள் செல்ல செல்ல பயம் அதிகரித்து பல ஸ்டன்ட்களை அமைச்சரிமிடருந்து எதிர்பார்க்கலாம். விஜயபாஸ்கருக்கு ஹாட்ரிக் வெற்றியா? தென்னலூர் பழனியப்பனுக்கு முதல் வெற்றியா? ரகசியம் மக்கள் விரல்களில்!