×

சீமான் கனவை கலைத்த கமல்ஹாசன்!

தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களைப் போல் அல்லாமல் சற்று வித்தியாசமான தேர்தலாகவே 2021ஆம் ஆண்டு தேர்தல் பார்க்கப்பட்டது. ஏனென்றால் 30 வருடங்களுக்கும் மேலாக கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு எதிரெதிர் துருவங்கள் என்றே தமிழ்நாட்டு அரசியல் வலம் வந்தது. முதல் முறையாக இவர்கள் இருவரும் இல்லாத அரசியல் சூழலில் தேர்தல் நடைபெற்றது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஐந்து முதலமைச்சர் வேட்பாளர்கள் களமிறங்கினர். ஸ்டாலின், எடப்பாடிக்கு அடுத்தடுத்த இடத்தில் சீமான், தினகரன், கமல்ஹாசன் போட்டியிட்டனர். எப்போதும் போல பலம்
 

தமிழ்நாட்டில் கடந்த தேர்தல்களைப் போல் அல்லாமல் சற்று வித்தியாசமான தேர்தலாகவே 2021ஆம் ஆண்டு தேர்தல் பார்க்கப்பட்டது. ஏனென்றால் 30 வருடங்களுக்கும் மேலாக கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு எதிரெதிர் துருவங்கள் என்றே தமிழ்நாட்டு அரசியல் வலம் வந்தது. முதல் முறையாக இவர்கள் இருவரும் இல்லாத அரசியல் சூழலில் தேர்தல் நடைபெற்றது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஐந்து முதலமைச்சர் வேட்பாளர்கள் களமிறங்கினர்.

ஸ்டாலின், எடப்பாடிக்கு அடுத்தடுத்த இடத்தில் சீமான், தினகரன், கமல்ஹாசன் போட்டியிட்டனர். எப்போதும் போல பலம் வாய்ந்த இரு ஜாம்பவான்களான திமுகவுக்கும் அதிமுகவுமே களத்தில் கடும் போட்டி நிலவியது. மூன்றாவது இடத்தைப் பிடிக்கப் போவது யார் என்ற கேள்வி தேர்தலுக்கு முன்பே எழுந்துவிட்டது. அதிமுகவிலிருந்து பிரிந்த அமமுகவா, நாம் தமிழரா, மக்கள் நீதி மய்யமா யார் மூன்றாம் இடத்தைப் பிடிக்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கு மே 2ஆம் தேதி முடிவு தெரிந்துவிட்டது.

234 தொகுதிகளிலும் தனித்தே களம் கண்ட நாம் தமிழர் சுமார் 30 லட்சம் வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. வாக்கு சதவீத ரீதியாகப் பார்த்தால் நாம் தமிழர் மூன்றாம் இடம், அதிகார ரீதியாகப் பார்த்தால் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18இல் வெற்றிபெற்ற காங்கிரஸ் மூன்றாம் இடம். மூன்றாம் இடம் பிடித்தாலும் கட்சியின் பெரிய தலைவர் சீமான் தோற்றுப் போனது, அவர்களின் நீண்ட நாள் கனவான 8 சதவீதம் வாக்கு பெறாமல் போனது என தம்பிகளுக்கு மனக்குறையை ஏற்படுத்தியுள்ளது.

8 சதவீத வாக்குகள் பெற்றிருந்தால் நாம் தமிழர் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகியிருக்கும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையத்தால் கிடைக்கும் சலுகைகள் ஏராளம். அதில் முதன்மையானது நிரந்தர சின்னம். சின்னத்தின் மதிப்பு நாம் அனைவரும் அறிந்ததே. இரட்டை இலைக்கு எதிரான வழக்கு இப்போதும் கூட நடந்துகொண்டிருக்கிறது. திமுகவிடமிருந்து பிரிந்துசென்ற வைகோ உதயசூரியன் சின்னத்திற்குச் சொந்தம் கொண்டாடி வழக்கில் தோற்றுப்போனது கடந்த கால வரலாறு. இப்படி பற்பல உதாரணங்களைக் காட்ட முடியும்.

நாம் தமிழரைப் பொறுத்தவரை சீரான வளர்ச்சியைத் தான் பிரதானமாகக் கொண்டிருக்கிறார்கள். திமுக, அதிமுக என்ற இருபெரும் ஆலமரங்களைச் சாய்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என அவர்களுக்கும் தெரியும். அதனால் தான் அவர்கள் 8% வாக்கு சதவீதத்தைத் தற்காலிக கனவாகக் கொண்டிருக்கிறார்கள். இம்முறை அக்கனவு பலித்துவிடும் என்று உறுதியாய் நம்பியிருந்தார்கள். ஆனால் அந்தக் கனவை மக்கள் நீதி மய்யம் சிதைத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

தமிழ்நாட்டில் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 4 கோடி 62 லட்சத்து 18 ஆயிரத்து 698. இதில் தோராயமாக 36 லட்சம் வாக்குகள் வாங்கியிருந்தால் தான் 8 சதவீத வாக்குகள் கிடைக்கும். ஆனால் நாம் தமிழருக்கு விழுந்த வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 41 ஆயிரத்து 974 வாக்குகள் மட்டுமே. ஆகவே நாம் தமிழர் பெற்றிருக்கும் வாக்கு சதவீதம் 6.64%. இதில் மக்கள் நீதி மய்யம் வாங்கியிருக்கும் மொத்த வாக்குகள் 12 லட்சத்து 57 ஆயிரத்து 397. வாக்கு சதவீதம் 2.72%. அமமுகவோ 13 லட்சத்து 17 ஆயிரத்து 256 வாக்குகளைப் பெற்று 2.85 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

அமமுகவைப் பொறுத்தவரை அதிமுகவின் வாக்குகளைப் பிரிக்கும் என்றே கூறப்படுகிறது. ஆகவே மாற்றுக் கட்சிகள் வேண்டும் என்று நினைப்பவர்களின் பெரும்பாலோனோர் வாக்குகளைப் பெறுவதில் நாம் தமிழருக்கும் மக்கள் நீதி மய்யத்துக்குமே கடும் போட்டி நிலவியிருக்கிறது. ஆனால் கமலை விட சீமான் சீனியர் அரசியல்வாதி என்பதாலும், அரசியல் அனுபவம் இருப்பதாலும் அவரை வாக்காளர்கள் டார்கெட் செய்திருக்கின்றனர். அதில் விடுபட்டவர்கள் கமலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

இதில் கமல் ரசிகர்களும் அடக்கம். ஒருவேளை கமல் அரசியல் என்ட்ரி கொடுக்கவில்லை என்றால் கமலுக்கு விழுந்த பாதி வாக்குகள் சீமானுக்கு விழுந்திருந்தால் இப்போது 8 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கும். அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக நாம் தமிழர் உருவெடுத்திருக்கலாம். இருப்பினும் 2016 தேர்தலில் 1.07 சதவீத வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் 2021 தேர்தலில் 6.64 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. நிச்சயமாக வரவேற்கத்தக்க வளர்ச்சி தான்.