×

தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறித்த இளைஞர்கள்... துப்பாக்கி முனையில் விரட்டிப்பிடித்த வேலூர் எஸ்.பி.

 

வேலூரில் சாலையோரம் பச்சைக்குத்தும் தொழில் செய்துவரும் இளைஞரிடம் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி பணம், செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடிய 2 இளைஞர்களை, மாவட்ட எஸ்.பி., செல்வகுமார் துப்பாக்கி முனையில் விரட்டிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் கிரீன் சர்க்கிள் சாலையில் திமுக மத்திய மாவட்ட அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பள்ளிகொண்டாவை சேர்ந்த சதீஷ் என்பவர் சாலையோரம் அமர்ந்து பச்சை குத்தும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் நேற்று சலவன்பேட்டை பகுதியை சேர்ந்த கிஷோர்(18) மற்றும் 17 வயதுடைய 2 சிறுவர்கள் சென்று பச்சை குத்தியுள்ளனர். அதற்காக சதீஷ் பணம் கேட்டபோது, அவர்கள் பணம் தர மறுத்து சதீஷ் உடன் தகராறில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும், தாங்கள் வைத்திருந்த 2 பட்டாக்கத்திகளை காட்டி சதீஷை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.1,200 பணம் மற்றும் ஒரு செல்போனை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர். சாலையில் பட்டாக்கத்தியுடன் 3 பேரும் செல்வதை, அந்த வழியாக சென்ற வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமார் இதனை கண்டார். இதனை அடுத்து, எஸ்.பி செல்வகுமார், அவரது கன்மேன் சதீஷ் ஆகியோர் மூவரையும் துரத்திச்சென்றனர். அப்போது, கிஷோர் உள்ளிட்ட 2 பேர் சிஎன்சி மருத்துவமனைக்குள் புகுந்த நிலையில் அவர்களை எஸ்.பி. செல்வகுமார் மடக்கிப்பிடித்து, வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

தொடர்ந்து. இந்த சம்பவம் குறித்து பச்சைக்குத்தும் தொழில் செய்யும் சதீஷ் அளித்த புகாரின் பேரில், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மற்றொரு 17 வயது சிறுவனை கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து ரூ.1200 பணம், 2 பட்டாக்கத்திகள் மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனிடையே, பட்டாக்கத்தியுடன் சாலையில் ஓடிய கொள்ளையர்களை வேலூர் மாவட்ட எஸ்.பி., செல்வகுமார் துரத்திச்செல்வது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.