மராமத்து பணியின்போது விபரீதம்... ஸ்ரீரங்கம் கோவில் சுற்றுச்சுவரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி!
திருச்சி ஸ்ரீரங்கோவிலில் மராமத்து பணியின்போது சுற்றுச்சுவரில் இருந்து தவறி விழுந்த கும்பகோணத்தை சேர்ந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை சுற்றி சுமார் 15 அடி உயரத்திற்கும் மேல் மதில் சுவர் கட்டப்பட்டு உள்ளது. பழமையான இந்த சுவரில் சிதிலமடைந்த பகுதிகளை சீரமைப்பதற்காக தற்போது மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் கும்பகோணம் அருகே உள்ள சோழக்கரம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் (47) என்பவர், கடந்த 6 மாதமாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், இன்று காலை கோவிலின் சித்திரை வீதியில் உள்ள சுற்றுச்சுவர் பகுதியில் வாசுதேவன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் வாசுதேவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனிருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு வாசுதேவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்த குறித்து ஸ்ரீரங்கம் போலீசார், வாசுதேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.