×

கொரோனா நிவாரண நிதி; சைக்கிள் வாங்க சேமித்த ரூ.1,000-ஐ வழங்கிய மாணவர்!

விருதுநகர் ராஜபாளையத்தில் தந்தையை இழந்த 6ஆம் வகுப்பு மாணவர், தனக்கு சைக்கிள் வாங்க சேமித்து வைத்த ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்பந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன், கனகா தம்பதியர். இவர்களது மகன் நிரஞ்சன்குமார் (12). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தாயார் கனகா குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து மகனை
 

விருதுநகர்

ராஜபாளையத்தில் தந்தையை இழந்த 6ஆம் வகுப்பு மாணவர், தனக்கு சைக்கிள் வாங்க சேமித்து வைத்த ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சம்பந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன், கனகா தம்பதியர். இவர்களது மகன் நிரஞ்சன்குமார் (12). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தாயார் கனகா குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து மகனை வளர்த்து வருகிறார்.

நிரஞ்சன் குமார் தனது தாயார் மற்றும் வீட்டிற்கு வரும் உறவினர்கள் கொடுக்கும் பணத்தை சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் சேமித்து வந்துள்ளார். இந்த நிலையில், கொரோனோ நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதியுதவி அளிப்பதை அறிந்த நிரஞ்சன் குமார், தனது சேமிப்பை வழங்க முடிவு செய்தார்.

இதனையடுத்து, நேற்று தனது தாயார் கனகாவுடன், ராஜபாளையம் வட்டாட்சியர் ரங்கநாதனை சந்தித்த நிரஞ்சன் குமார், தான் சைக்கிள் வாங்க சேமித்து வைத்திருந்த ரூ.1000 பணத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார். அவருக்கு வட்டாட்சியர் ரங்கநாதன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தந்தை இழந்து ஏழ்மையில் வாடியபோதும், பிறருக்கு உதவ முனைந்த சிறுவனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.