×

ஆணவ படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி விசிகவினர் ஆர்ப்பாட்டம்!

 

தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தி, ஈரோட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழகத்தில் தொடர்ந்து நடக்கும் ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம் இயற்றுதல் உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை  சார்பில், ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.  இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பாசறை மாவட்ட அமைப்பாளர் தனவிஜயன் தலைமை தாங்கினார். மாநகர அமைப்பாளர் விவேகானந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரஞ்சித், ஆவண காப்பக மைய மாவட்ட அமைப்பாளர் பால்ராஜ், நில உரிமை மீட்பு இயக்க மாவட்ட அமைப்பாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஈரோடு அரசாங்கம், மண்டல செயலாளர் சுசி கலையரசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது, ஈரோட்டில் பிரப் ரோடு பெயர் மாற்றியமைக்கப்பட்டைதை ரத்து செய்து விட்டு மீண்டும் அதே பெயரை சூட்ட வேண்டும் என்றும், தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொகுதி செயலாளர் அரங்கமுதல்வன், துப்புரவு ஊழியர் நலவாரிய மாநில துணை செயலாளர் சரவணன், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன், இளைஞரணி மாவட்ட செயலாளர் சந்திரன், பாசைறை நிர்வாகிகள் நித்தியானந்தன், ரியாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.