×

குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டுமென மஞ்சள் விவசாயிகள் கோரிக்கை

 

ஈரோடு மாவட்டம் இந்திய அளவில் மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முதலிடம் பெற்று வந்தது. மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் அதிக உற்பத்தி செய்து தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டு உள்ளது. அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சி, தரமான மஞ்சள் உற்பத்தி செய்யாதது மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு விற்பனை செய்ய இயலாதது.  கடந்த 2020-21 ஆண்டை காட்டிலும் நடப்பு 2021-22 ஆண்டுடில் மஞ்சள் உற்பத்தி 30 சதவீதம் தமிழகத்தில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. 

இருப்பினும், ஈரோடு புவிசார் குறியீடு பெற்ற குர்குமின் அளவு அதிகம் உள்ள மஞ்சளை விவசாயிகள் உற்பத்தி செய்தால் மட்டுமே அதிக விலைக்கு விற்று ஏற்றுமதி செய்ய இயலும். இதனை தமிழக வேளாண் துறை விவசாயிகளுக்கு அறிவுறுத்தி, புவிசார் குறியீடு பெற்ற விதை மஞ்சளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மேலும், உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள் கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும்போது ரசாயனங்களை பயன்படுத்தி பாதுகாக்கப்படுவதால், அதன் தரம் குறைந்து மஞ்சளில் ஓட்டை விழுந்து விடுகின்றது. 

இதனால், ஏற்றுமதி செய்யும்பொழுது விலை குறைவாகவும் இதனைப் பயன்படுத்துபவர்களுககு உடல் தீங்கு ஏற்படுகின்றது. இதனை போக்க மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் உள்ளவாறு, தமிழகத்தில் அதிக மஞ்சள் விளைவிக்கும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் குளிர்பதன கிடங்கினை, அரசு தமிழகத்தில் அதிக அளவு அமைத்தல் வேண்டும். இதில் இருப்பு வைக்கும் மஞ்சள் விவசாயிகளுக்கு, குறைந்த அளவில் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். 

மேலும், குளிர்பதன கிடங்கு அமைப்பதற்கு தனியார் துறையை ஊக்குவிக்கும் விதத்தில் 50 சதவீத மானியம் மற்றும் மின்சாரத்திற்கும் மானியம் வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் மஞ்சள் விளைச்சல் மற்றும் விளைவிக்கப்படும் மஞ்சளை நல்ல விலை கிடைக்கும் வரை குளிர்பதன கிடங்குகளின் மூலம் இயற்கையான முறையில் பாதுகாத்து விவசாயிகள் நல்ல லாபம் ஈட்ட முடியும். எனவே மத்திய மாநில அரசுகள் இதனை போர்க்கால அடிப்படையில் அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.