×

வரத்து அதிகரிப்பால் ஈரோட்டில் தக்காளி விலை குறைந்தது... கிலோ ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனை!

 

வரத்து அதிகரித்துள்ளதால் ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்து கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையானது. தக்காளி விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நிம்மதி அடைதுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக காய்கறிகள் விலை அதிகரித்துள்ளன. குறிப்பாக தக்காளி விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்தது. இந்த மாதம் தொடக்கத்தில் 1 கிலோ ரூ.20 வரை விற்ற தக்காளி பின்னர் ஜெட் வேகத்தில் வேகமாக உயர்ந்து, 1 கிலோ சில்லரை விற்பனையில் ரூ.140 வரை விற்பனையானது. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

ஈரோடு வ. உ. சி. பூங்காவில்  செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறி மார்க்கெட்டில், மாவட்டம் முழுவதும் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதிகளிலிருந்து தக்காளி அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்தது. கடந்த சில நாட்களாக 26 கிலோ தக்காளி பெட்டி ரூ.2,500 வரை விற்பனையானது. 14 கிலோ தக்காளி பெட்டி ரூ.1200 - வரை விற்பனையானது. 

இந்த நிலையில், இன்று வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதுவரை 2000 முதல் 3000 வரை பெட்டிகள் வரை வரத்தாகியிருந்த நிலையில், இன்று 7000 தக்காளி பெட்டிகள் வரத்தாகின. இதன் காரணமாக இன்று வ.உ.சி. காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்துள்ளது. 26 கிலோ தக்காளி பெட்டி ரூ.1000 முதல் 1050 வரையும், 14 கிலோ பெட்டி ரூ.650 முதல் 700 வரையும் விற்பனையானது. சில்லரையில் 1 கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது. கிட்டத்தட்ட கிலோவுக்கு ரூ.40 முதல் ரூ.50 வரை தக்காளி விலை குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.