×

2 ஆண்டுகளாக ஊரைவிட்டு விலக்கப்பட்டவர்கள் விவகாரம்! காவல் அதிகாரிகள் சமரசம் செய்து வைத்தனர்!

திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூர் ஊராட்சி பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் – மங்கம்மாள் தம்பதியரின் மகன் கனகு என்கிற வாலிபர் அதே பகுதியை சேர்ந்த குமரேசன் – லட்சுமி தம்பதியின் மகள் ஜெயப்பிரியாவை காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிகளில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊரில் பிரச்சனை வெடித்தது. இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகவும், 1
 

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புல்லூர் ஊராட்சி பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் – மங்கம்மாள் தம்பதியரின் மகன் கனகு என்கிற வாலிபர் அதே பகுதியை சேர்ந்த குமரேசன் – லட்சுமி தம்பதியின் மகள் ஜெயப்பிரியாவை காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிகளில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஊரில் பிரச்சனை வெடித்தது. இந்நிலையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகவும், 1 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தினால் ஊருக்குள் அனுமதிப்பதாகவும் ஊர் பஞ்சாயத்து தாரர்களான எல்லப்பன் மற்றும் நாகேஷ் ஆகியோர் தீர்ப்பளித்தனர்.

ஆனால் காதல் தம்பதிகள் இந்த பஞ்சாயத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. ஆகவே, அபராத தொகையை கட்டாமல் ஊரிலிருந்து வெளியேறினர். அவ்வாறு வெளியேறிய கனகு – ஜெயபிரியா ஜோடி சென்னை போரூர் பகுதியில் குடியேறினர். அதில் கனகு கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காலம் தொற்று காரணமாக அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து சென்னையில் கஷ்டப்பட்டு வந்தனர்.எனவே சொந்த ஊர் திரும்ப கணவன்-மனைவி முடிவு செய்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஊர் வந்து சேர்ந்தனர். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரவிடப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் அவர்களை பஞ்சாயத்து தாரர்கள் ஊருக்குள் விடாமல் தடுத்துள்ளனர். “அபராத தொகையை கட்ட வேண்டுமென்றும், இல்லை என்றால் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வெத்தலை பாக்கு வைத்து மன்னிப்பு கேட்கவேண்டும் என பஞ்சாயத்து தாரர்கள் கட்டளையிட்டனர்” வேறு வழி தெரியாத பெண் வீட்டார் பஞ்சாயத்து காரர்களிடம் கெஞ்சி கூத்தாடி பேசி 35 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். அதற்கு உறுதி பணமாக 5 ஆயிரம் ரூபாயை அளிக்க முன்வந்த நிலையில் பஞ்சாயத்தார்கள் அதை ஏற்காமல் மறுத்துவிட்டனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த கனகு ஜெயபிரியா தம்பதியினர் கடந்த 10ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்தனர்.அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென திம்மாம்பேட்டை காவல் நிலையத்திற்கு மாவட்ட கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தார். ஆனால் அந்த புகாரை விசாரிக்காமல் வைத்திருந்த திம்மாம்பேட்டை காவல்துறையினர் வாணியம்பாடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடந்த புகார்கள் மீது குறைதீர்க்கும் முகாமில் கலந்துக் கொண்டனர். கனகு மனைவி ஜெயப்பிரியா மற்றும் ஜெயப்பிரியா வின் தந்தை குமரேசன் ஆகியோர் வாணியம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு வந்தனர்.அப்போது கனகுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியினரும், ஊர் நாட்டாமை எல்லப்பன் தரப்புக்கு ஆதரவாக அதிமுகவினரும் அந்த முகாமிற்கு வந்தனர்.

அப்போது இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் காவல்துறையினர் அவர்களை திருமண மண்டபத்தில் இருந்து வெளியேற்றினர். பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கனகு மற்றும் அவரது மனைவி ஜெயப்பிரியா ஆகியோர் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதனை தொடர்ந்து காதல் திருமணம் செய்து கொண்ட கனகராஜ், ஜெயபிரியா ஆகியோர் மற்றும் இரு குடும்பத்தினர்களுக்கு ஊர் சார்பில் எந்த நிபந்தனைகளுக்கு விதிக்கக்கூடாது என்று ஊர் நாட்டான்மைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட காதல் ஜோடிகள் விவகாரத்துக்கு காவல் அதிகாரிகளின் தலையீட்டால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.