×

கோவை அருகே குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

 

கோவை மாவட்டம் சூலூர் அருகே குட்டையில் சேற்றில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முதலிபாளையம் மேற்கு வீதியை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் சதீஷ்குமார்(14). இதேபோல் பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆறுச்சாமியின் மகன் பூபதி (14) மற்றும் சுரேஷ் மகன் சபரிவாசன். இவர்கள் மூவரும் அரசூர் அரசுப் பள்ளியல் முறையே 7, 8 மற்றும் 6ஆம் வகுப்பு படித்து வந்தனர். நண்பர்களான மூவரும் நேற்று காலை முதலிபாளையத்தில் உள்ள குட்டைக்கு குளிக்க சென்றுள்ளனர்.

கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக குட்டையில் 6 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்துள்ளது. இந்த நிலையில், சிறுவர்கள் மூவரும் துணிகளை கரையில் வைத்துவிட்டு குட்டையில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது, குட்டையில் உள்ள சேற்றில் சிக்கிக் கொண்ட  சதீஷ்குமார், பூபதி, சபரிவாசன் ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். காலை 10 மணிக்கு சென்ற சிறுவர்கள் மாலை 5 மணி ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குட்டையில் சென்று தேடினர்.

அப்போது, அங்கு சிறுவர்களின் உடைகள் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அந்த பகுதி இளைஞர்கள் உதவியுடன் குட்டையில் இறங்கி தேடினர். அப்போது, மூவரது உடல்களும் மீட்கப்பட்டது. தகவல் அறிந்த சூலூர் போலீசார் மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியான சம்பவம் முதலிபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.