×

திருவண்ணாமலையில் வனவிலங்குகளை வேட்டையாடிய மூவர் கைது!

 

திருவண்ணாமலையில் வனவிலங்குகளை வேட்டையாடிய 3 பேரை கைதுசெய்த வனத்துறையினர், அவர்களுக்கு தலா 25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லால் அறிவுறுத்தலின் படி, வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று அதிகாலை திருவண்ணாமலை - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள திப்பக்காடு வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திப்பக்காடு வனப்பகுதியில் இருந்து 2 மோட்டார் சைக்கிள்களில் 5 பேர் வெளியே வந்தனர். வனத்துறையினரை கண்டதும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், அங்கிருந்து தப்பியோடினர்.

இதனை கண்ட வனத்துறையினர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை மடக்கிப் பிடித்து சோதனை நடத்தினர். அப்போது, அவர்கள் முயலை வேட்டையாடி வாகனத்தில் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, பிடிபட்ட நபர்களிடம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் திருவண்ணாமலை அருகே உள்ள கூத்தலவாடியை சேர்ந்த கருணாகரன் (36), மங்கலம்புதூரை சேர்ந்த திருமலை (32) மற்றும் கோடிக்குப்பத்தை சேர்ந்த ஆறுமுகம் (30) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, வனத்துறையினர் 3 பேருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்தனர். மேலும், அவர்கள் வேட்டைக்குப் பயன்படுத்திய மெகா டார்ச் லைட், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் வேட்டையாடிய முயல் பறிமுதல் செய்யப்பட்டது.