×

மதுபோதையில் அதிவேகமாக பைக் ஓட்டிச்சென்ற இளைஞர்... வீடுவரை துரத்திச் சென்று பிடித்த ஆட்சியர்!

 

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற இளைஞரை வீடுவரை துரத்திச்சென்று பிடித்த கரூர் மாவட்ட ஆட்சியரின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்ட ஆட்சியராக மருத்துவர் பிரபு சங்கர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் அலுவலக பணி நிமித்தமாக தனது காரில் கரூர் நகரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இளைஞர் ஒருவர் மதுபோதையில் விபத்து ஏற்படுத்தும் விதமாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றார்.  இதனை கவனித்த  ஆட்சியர் பிரபுசங்கர், தனது வாகனத்தில் அந்த நபரை பின் தொடர்ந்து  சென்றார்.

அந்த நபர் தான்தோன்றிமலை பகுதியில் உள்ள வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். இதனை அடுத்து, அந்த நபரின் வீட்டின் முன்பு தனது காரை நிறுத்திவிட்டு இறங்கிய ஆட்சியர், தனது பாதுகாவலர் மூலம் தான்தோன்றிமலை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய இளைஞர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக சென்ற நபரை துரத்திச்சென்று பிடித்து நடவடிக்கை மேற்கொண்ட கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரின் செயலுக்கு பொதுமக்கள் உள்பட் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.