×

வடிவேல் பாணியில் கட்டிய வீட்டை காணவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார்!

 

ஈரோட்டில் திரைப்பட பாணியில் கட்டிய வீட்டை காணவில்லை என பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து. இவரது மனைவி சுந்தரி(59). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்லமுத்து பவானி அரசு மருத்துவமனையில் வேன் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். ஓய்வு பெற்றபின் அதிலிருந்து கிடைத்த தொகை மற்றும் வங்கிகளில் கடன் பெற்று ரூ.22 லட்சம் மதிப்பில் பவானி அருகே தொட்டிபாளையம் கிராமத்தில் 9 சென்ட் நிலத்தை வாங்கி அதில் கடந்த 2009ஆம் ஆண்டு புதிதாக வீடு ஒன்றை கட்டி அதில் வசித்துள்ளார். 

இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு செல்லமுத்துக்கு திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவ வசதிக்காக குடும்பத்துடன் 2015-ல் செல்லமுத்து ஈரோடு முத்தம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு செல்லமுத்து உடல்நலம் சரியில்லாமல் உயிரிழந்தார். அதன்பின், சுந்தரி பவானி தொட்டிபாளையத்தில் உள்ள தங்களது சொந்த வீட்டில் தங்கலாம் என்று சென்று உள்ளார். ஆனால் அங்கு வீடு இருந்ததற்கான அடையாளமே இல்லாத அளவிற்கு இடித்து அகற்றப்பட்டதுடன், நிலத்திற்கான எல்லைக்  கற்களும் இல்லாததையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

அதன் பின், வருவாய்த்துறையில் ஆவணங்களை சரிபார்த்தபோது அந்த இடம் வேறொருவரின் பெயருக்கு முறைகேடாக மாற்றப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தனது வீடு மற்றும் நிலத்தை காணவில்லை என்றும் கண்டுபிடித்து தருமாறும்  சுந்தரி மனு அளித்தார். இதனை விசாரித்த மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன்,  புகார் குறித்து கள விசாரணை நடத்த வருவாய் கோட்டாச்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.