×

நர்சிடம் செல்போனை பறித்துச்சென்ற வாலிபரை மடக்கிபிடித்த பொதுமக்கள்... மற்றொருவர் தப்பியோட்டம்!

 

ஈரோட்டில் நர்சிடம் செல்போனை பறித்துச்சென்ற திருப்பத்தூரை சேர்ந்த இளைஞரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு சூரம்பட்டி, என்.ஜி.ஜி.ஓ. 6-வது வீதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி விஜயலட்சுமி (42). இவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் விஜயலட்சுமி தான் வேலை செய்யும் ஆஸ்பத்திரிக்கு வந்து கொண்டிருந்தார். அரசு மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்தபோது அவர் பின்னால் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். திடீரென மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த வாலிபர் விஜயலட்சுமி செல்போனை பறித்துக்கொண்டு தப்பி சென்றார். 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜயலட்சுமி திருடன்.. திருடன் என கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை விரட்டினர். அப்போது, அங்குள்ள ஒரு வளைவில் அவர்கள் திரும்பியபோது பின்னால் அமர்ந்திருந்த நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொருவர் தப்பி சென்றுவிட்டார். பிடிபட்ட நபரை அருகிலுள்ள அரசு தலைமை மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்தனர். 

போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் திருப்பத்தூர் மாவட்டம் அபாய தெருவை சேர்ந்த குருபாபா என்கிற அஸ்ரத் (20) என தெரிய வந்தது. அவரிடம் இருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தப்பிஓடிய நபர் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.