×

மகா தீபத்தைக் காண மலை உச்சிக்குச் சென்றவர் மூச்சுத்திணறி உயிரிழப்பு...

 

பிரசித்திபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் , கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கடந்த 19 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று மாலை 6 மணிக்கு, கோவிலின் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மகா தீபத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு வருவர். இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 20,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

11 நாட்கள் மலை உச்சியில் காட்சியளிக்கும் தீபத்தைக் காணவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் சிலர் தடையை மீறி மலை உச்சிக்குச் சென்று மகா தீபத்தைக் கண்டு வருகின்றனர். அந்த வகையில் சேத்துபட்டு , கங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரை(30) என்பவர் சென்றுள்ளார். முன்னதாக மலை ஏறும் அனுபவம் இல்லாத அவர், மலை உச்சியின் அருகே  சென்ற போது தீடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து நிகழ்விடத்திலேயே மயங்கிவிழுந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்ரிரவு திருப்பணி ஊழியர்கள் மலையிலிருந்து கீழே இறங்கி வரும் வழியில், துரை பிணமாக கிடந்ததை பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர்,  துரையின் உடலை மீட்டு  அதிகாலை 3 மணியளவில் அடிவாரத்துக்குக் கொண்டு வந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.