×

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 11-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம்... 740 இடங்களில் நடைபெறுகிறது!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 11-வது கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் 740 இடங்களில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 17,30,600 நபர்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் வரை 13,46,182 நபர்கள்(77.80 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள். 6,89,052  நபர்கள் (39.8 சதவீதம்) இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீதம் இலக்கினை அடைவதற்கு ஏதுவாக தொடர்ந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், 10 முறை மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் 11-வது முறையாக மாபெரும் தடுப்பூசி முகாம்கள் இன்று  வியாழக்கிழமை அன்று 740 இடங்களில் நடத்தப்பட உள்ளது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தி, குறிப்பிட்ட நாட்கள் கடந்து 2-வது தவணை தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள்  எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 1,57,518 நபர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, இம்முகாம்களை பயன்படுத்தி அனைத்து பொதுக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.