×

பல்லடம் அருகே ரூ.40 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு!

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.40 கோடி மதிப்பிலான கோவில் நிலம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள நாரணாபுரம் அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமான 8.95 ஏக்கர் புஞ்சை நிலம் பல்லடம் - திருப்பூர் பிரதான சாலையில் உள்ளது. சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலத்தை, பல்லடம் கரையான்புதூரை சேர்ந்த ராமலிங்கம், சேதுராமலிங்கம், செந்தில் அமுதா உள்ளிட்ட 6 நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து, கடந்த 30 ஆண்டுகளாக கோவிலுக்கு குத்தகை தொகை செலுத்தாமல் விவசாயம் செய்து வந்தனர்.

இதனை அறிந்த, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெயச்சந்திரன், அறநிலையத்துறை சார்பில் திருப்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மேற்படி நபர்களை ஆக்கிரமிப்புதாரர்களாக கருதி, நிலத்தை கையகப்படுத்தி நபர்களை வெளியேற்றம் செய்ய திருப்பூர் இணை ஆணையருக்கு உத்தவு வழங்கியது.

அதன்படி, இன்று பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ், திருப்பூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணயைர் செல்வராஜ், நாரணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் மோகன்தாஸ் மற்றும் போலீசாரால் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த நிலம் நாரணாபுரம் அங்காளம்மன் கோவிலுக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.