×

விருதுநகரில் வரும் 17ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

 

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 17ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக மாதத்தின் 3ஆம் வெள்ளிக்கிழமைகளில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் மனுதார்களுக்காக வரும் 17ஆம் தேதி அன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்களும் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, டிப்ளமோ ஆகிய கல்வித்தகுதி உடையவர்கள் விருதுநகர், சிவகாசி, கோவை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணியமர்த்தம் செய்ய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் வரும் 17ஆம் தேதி அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கல்வித்தகுதியை பதிவுசெய்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி நியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.