×

ஈரோட்டில் இன்று தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு!

 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவிகளை அழைத்து வரும் வாகனங்களை முறையாக பராமரிக்கப்படுகிறதா? என, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் மாணவ - மாணவிகளை அழைத்து வரும் பேருந்துகள், வேன்கள் போன்ற வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு இயக்கப்படுகிறதா? என்பது குறித்து ஆண்டுதோறும் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்படி, நடப்பாண்டு ஈரோடு கிழக்கு, மேற்கு, பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் தனியார் பள்ளிகளின் வாகனங்களின் ஆய்வு இன்று ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள ஏ.இ.டி பள்ளி மைதானத்தில் நடந்தது. 

இதில், ஈரோடு கிழக்கு, மேற்கு மற்றும் பெருந்துறை பகுதியில் இருந்து மொத்தம் 600-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டு வரப்பட்டது. ஈரோடு ஆர்.டி.ஓ. பிரேமலதா வாகனங்களை ஆய்வு செய்தார். வாகனங்களில் தரமான டயர் மாட்டப்பட்டுள்ளதா?, வாகன ஓட்டுநரின் லைசன்ஸ் சரியாக உள்ளதா?, ஆர்.சி. புக் முறையாக உள்ளதா?  வாகனங்களில் மருத்துவ காரணங்கள் உள்ளதா? என ஆய்வுசெய்தார். மேலும், ஜி.பி.எஸ். கருவி சரியாக செயல்படுகிறதா? என்றும், வேக கட்டுப்பாடு கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதா?, அவசரகால வழிகள் முறையான வேலை செய்கிறதா? எனவும் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஒரு சில வாகனங்களுக்கு அறிவுரை வழங்கினார்.


 இதனை அடுத்து,வாகனங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து துணை ஆணையாளர் ரவிச்சந்திரன், வட்டார போக்குவரத்து அதிகாரிகளான ஈரோடு மேற்கு பிரதீபா, கிழக்கு பதுவைநாதன், பெருந்துறை சக்திவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமச்சந்திரன், வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் கதிர்வேல், சிவகுமார், பாஸ்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.