×

ஜெய்பீம் திரைப்பட விவகாரம்... நடிகர் சூர்யா மீது பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் 

 

ஜெய் பீம் படத்தில் வன்னியர் சமூகம் குறித்து அவதூறு பரப்பும் விதமாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி நடிகர் சூர்யா மீது பென்னாகரம் காவல் நிலையத்தில் பாமக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 

நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம், திரைப்படத்தில் வன்னியர் சமூதாயம் குறித்து அவதூறான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்காக, சூர்யா மன்னிப்பு கோர வேண்டுமெனவும், இல்லாவிட்டால் ரூ.5 கோடி இழப்பீடு வழங்கவும் வேண்டுமென வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீசும் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பென்னாகரம் ஒன்றிய குழு தலைவர் கவிதா ராமகிருஷ்ணன் தலைமையில் பாமகவை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் நேற்று பென்னாகரம் காவல் நிலையத்திற்கு வந்து, ஜெய்பீம் படக்குழுவினருக்கு எதிராக புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது, ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகம் குறித்து அவதூறான காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது. சில காட்சிகளில் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தவரை கொடுமை படுத்துவதுபோல காட்சி படுத்தியுள்ளது வன்னிய சமூகத்தினரின் எண்ணங்களை புண்படுத்தும் விதமாக அவதூறாக காட்சிகள் அமைந்துள்ளது. 

எனவே அவதூறான காட்சிகள் அமைத்து இயக்கிய இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் ஆகியோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மனு அளித்தபோது, பென்னாகரம் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகன்,  கிழக்கு ஒன்றிய செயலாளர் கேபி முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் வெண்ணிலா அருள்மொழி, செண்பகவள்ளி சக்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.