×

இன்னசென்ட் திவ்யாவுக்கு பை..பை.. நீலகிரி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் நியமனம்...

 

நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த இன்னசென்ட் திவ்யா இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.  கடந்த 2017 ஆம் ஆண்டு ஆட்சியராக நியமிக்கப்பட்ட இன்னசென்ட்  திவ்யா,  அதற்கு முன்னதாக அவர் ஜெயலலிதாவின் தனி சிறப்பு அதிகாரியாக பதவி வகித்து வந்தார். ஆட்சியராக பொறுப்பேற்றபின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் ஒழிப்பு,  தூய்மை இந்தியா ஆகிய திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்து மக்களிடையே நல்ல வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றார்.


கடந்த 2019ஆம் ஆண்டு முதலே இன்னசென்ட் திவ்யா  இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன அவரது இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கில், “உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் திவ்யாவை இடமாற்றம் செய்யக்கூடாது” என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.  அதனைத் தொடர்ந்தும் யானை வழித்தடங்களை மீட்டெடுப்பது தொடர்பான பணிகளை செய்து வந்தார்.


இந்நிலையில்  தமிழக அரசு மீண்டும் இடைக்கால மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில்,  நிர்வாக பணிகளுக்காக இன்னசென்ட்  திவ்யாவை இடமாற்றம் செய்வது அவசியமாகிறது என குறிப்பிட்டனர். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 16ஆம் தேதி இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்வதற்கு அனுமதி வழங்கியது.  இதனை அடுத்து நீலகிரியின் பொறுப்பு ஆட்சியராக கீர்த்தி பிரியதர்ஷினி நியமிக்கப்பட்டார். 


இந்நிலையில் தற்போது நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நகராட்சி நிர்வாகத்தின் இணை ஆணையராக பணியாற்றி வந்த எஸ்.பி.அம்ரித் நியமனம் செய்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் வெ இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.இருப்பினும் இன்னசென்ட் திவ்யாவின் இடமாற்றும் மற்றும் அவரது  புதிய பணி என்ன என்பது தொடர்பான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.