×

இரவுநேர ஊரடங்கால் வியாபாரிகள் வரவில்லை... ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் கடும் பாதிப்பு!

 

இரவுநேர ஊரடங்கு மற்றும் தைப்பூசம் காரணமாக வியாபாரிகள் வராததால், ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் ஜவுளி சந்தை இங்கு வருகிறது. இங்கு தினசரி கடைகளும், வார சந்தையும் நடந்து வருகிறது. வாரச்சந்தை திங்கள் கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க் கிழமை மாலை வரை நடைபெரும். இந்த வார சந்தையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். இங்கு சாதாரண நாட்களை விட விசேஷ நாட்களில் விற்பனை அதிகமாக இருக்கும். 

இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பொங்கல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று ஜவுளி சந்தை கூடியது. இரவுநேர ஊரடங்கு மற்றும் தைப்பூசம் காரணமாக வெளி மாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மொத்த வியாபாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இதனால் நேற்று வெறும் 5 சதவீதம் அளவுக்கு மட்டுமே மொத்த வியாபாரம் நடைபெற்றது. இதைப்போல், உள்ளூர் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். இதனால், சில்லரை வியாபாரம் கடந்த வாரத்தை விட குறைவாகவே நடைபெற்றது. நேற்று வெறும் 10 சதவீதம் மட்டுமே சில்லரை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இன்னும் சில நாட்களுக்கு இதே நிலைமை தான் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.