×

ஈரோட்டில் இரவுநேர ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்... தேவையின்றி சுற்றியவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்!

 

ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்த நிலையில், முதல் நாளில் சாலையில தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இது நடத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு நேற்று இரவு முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு அமலுக்கு  வந்தது. 

இதன் காரணமாக, ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு ஜிஹெச் ரவுண்டானா, மேட்டூர் சாலை, பெருந்துறை சாலை, பேருந்து நிலையம், கருங்கல் பாளையம், ஸ்வஸ்திக் கார்னர், மீனாட்சி சுந்தரனார் சாலையில் உள்ள மேம்பாலம் போன்ற பகுதியில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் அதேநேரம் அத்தியாவசிய வாகனங்கள் என பால், காய்கறி, மருந்து, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் சேவை மட்டும் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டது. பெட்ரோல் பங்குகள்  திறக்கப்பட்டு இருந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஈரோடு மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மேல் தடையை மீறி ஒரு சில வாகனஓட்டிகள் வெளியே சுற்றி வந்தனர். முதல் நாள் என்பதால் அவர்களை பிடித்து எச்சரித்த போலீசார், அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இதைப்போல், ஒரு சில பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேலும் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. அந்த கடை உரிமையாளர்களிடம் போலீசார் கடையை அடைக்க வலியுறுத்தினர். 

கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், பவானிசாகர், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் தமிழக- கர்நாடக மாநில எல்லைகளான ஆசனூர், பர்கூர் சோதனை சாவடி மற்றும் அண்டை மாவட்டங்களான நாமக்கல், திருப்பூர், கரூர் மாவட்ட எல்லைகளில் உள்ள 12 சோதனை சாவடி என மொத்தம் 14 சோதனை சாவடிகளிலும் நேற்று இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த வாகனங்கள் மட்டுமே தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தடை மீறி சுற்றிய வாகனங்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.