×

கரூரில் வாகன சோதனையின்போது வேன் மோதியதில் மோட்டார் ஆய்வாளர் பலி!

 

கரூர் நகரில் வாகன சோதனையின் போது அதிவேகமாக சென்ற வேன் மோதிய விபத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார் 

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் கனகராஜ்(56). இவர் நேற்று காலை வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த வேன் ஒன்று, ஆய்வாளர் கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய கனராஜை, அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து தான்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜ் மீது வாகனத்தை ஏற்றி கொன்ற நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தை கரூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவடிவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். இதனிடையே, மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்கப்படும் என அறிவித்து உள்ளார்.