×

இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி!

 

ஈரோடு மாவட்டத்தில் மழைவெள்ளத்தினால் எங்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில், மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு உடைகள், பாத்திரம், எரிவாயு இணைப்பு ஆகியவை 5,790 பயனாளிகளுக்கு ரூ.57 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர் சந்தித்த அமைச்சர் முத்துச்சாமி, ஈரோடு மாவட்டம் அரச்சலூர் இஞ்சம்பள்ளி மற்றும் பவானிசாகர் ஆகிய இடங்களில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இந்த நலத்திட்ட உதவிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு வழங்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளதாகவும் கூறினார். 

ஈரோடு மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் எங்கும் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்த அமைச்சர் முத்துச்சாமி, குறிப்பாக பர்கூர் மலைப்பதையில் நிலச்சரிவு மட்டுமே ஏற்பட்டதாகவும் கூறினார். அங்கு தற்காலிகமாக போக்குவரத்து சரிசெய்யப்பட்டு, இலகு ரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதாகவும், இதுகுறித்தும் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என்றும் அமைச்சர் முத்துச்சாமி கூறினார்.