×

ராயக்கோட்டை அருகே மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை பலி!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயகோட்டை அருகே விவசாய நிலத்தில் பதித்து வைத்திருந்த மின்கம்பியை கடித்த ஆண் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 200-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, ஊடேதுர்கம், சானமாவு வனப் பகுதிகளில் முகாமிட்டுள்ளன.  இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுயானைகள், அருகில் உள்ள விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், சானமாவு வனப்பகுதியில் இருந்து நேற்றிரவு வெளியேறிய ஒற்றை ஆண் காட்டுயானை உணவு தேடி  ராயகோட்டை வனசரகத்திற்க்குட்பட்ட வெலகலஹள்ளி பகுதியில் உள்ள விளை நிலங்களில் சுற்றி வந்தது. அப்போது, தனியார் விவசாய நிலத்தில் பதித்து வைக்கப்பட்டிருந்த மின்சார ஒயரை காட்டுயானை கடித்ததால்,  மின்சாரம் பாய்ந்து அந்த யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இன்று அதிகாலை தோட்டத்தில் காட்டு யானை இறந்து கிடப்பதை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், ராயக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் உயிரிழந்த காட்டு யானையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் மூலம் யானைக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது. மேலும், காட்டுயானை இறந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.