×

ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்களால் ரூ.20 கோடி  வருவாய் இழப்பு!

 

ஈரோட்டில் ஞாயிறு அன்று தளர்வுகளற்ற ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில்,  ஊரடங்கு காரணமாக 20 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  

தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.  இதனால் அனைத்து கடைகளும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன.  முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான ஜவுளிக்கடைகள், தொழில் சார்ந்த நிறுவனங்கள் ஆகியவையும் அடைக்கப்பட்டிருந்தன. 

தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் வியாபாரிகள் அதிக அளவில் பொருட்களை கடன்  வாங்கி வைத்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பு வியாபாரிகளுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஈரோடு கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில் வார விடுமுறை நாட்களிலும் பண்டிகை காலத்திலும் விற்பனை அதிகமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட ஒருபடி அதிகமாக இருக்கும் என்று வியாபாரிகள் கணக்குப் போட்டு வைத்திருந்தனர். இதற்காக பருத்தித் துணிகள், சிறுவர் - சிறுமியர் பேன்சி ரக துணிகள், காட்டன் புடவைகள், காட்டன் உடைகள் என பல லட்ச ரூபாய் அளவுக்கு துணிகளைக் கொள்முதல் செய்து கடையில் வைத்து இருந்தனர். 

ஆனால் முழு வருடங்கள் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 700 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் ஒரு கடைக்கு 10 ஆயிரம் ரூபாய் என்ற வகையில் நேற்று முன்தினம் ஒரு நாள் ரூ. 7 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர். இதைப்போல், பெரிய பெரிய வணிக நிறுவனங்கள், கடைகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் பதிவு பெற்ற 9,100 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சில்லரை விற்பனையில் ரூ.10 கோடியும், மொத்த விற்பனையில் ரூ.10 கோடியும் என ரூ.20 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது தவிர நூற்றுக்கணக்கான சாலையோர கடைகள் அடைக்கப்பட்டதால் கடும் இழப்பு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.